எமக்கு இந்தப் பிரபஞ்சம் பற்றிய பற்பல விடயங்கள் இன்று தெரியும். அதனால் இன்னும் தெரியாத புதிர்கள் இருக்கின்றனவா என்று உங்களுக்கு சந்தேகமாக இருக்கலாம்... ஆனால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும், தீர்க்கப்படாத புதிர்கள் கொட்டிக்கிடக்கின்றன இந்தப் பிரபஞ்சத்தில்! இந்தப் பிரபஞ்சப் புதிர்களில் ஒரு பெரிய புதிர் நமது சூரியனைப் பற்றியதாகும்.
எப்படி பூமியை நாம் ஒரு பெரிய பாறைக்கோளம் என்று அழைக்க முடியாதோ, அதேபோல சூரியனை ஒரு பெரிய நெருப்புக்கோளம் என அழைக்க முடியாது. எப்படி பூமியின் மேற்பரப்பில் மலைகள் போன்ற அமைப்புக்கள் காணப்படுகிறதோ அதே போல சூரியனின் மேட்பரப்பிலும் சுவாரசியமான அமைப்புக்கள் உண்டு. மற்றும் பூமியின் வளிமண்டலம் போல சூரியனுக்கும் உண்டு. அது கொரோனா (Corona) என அழைக்கப்படுகிறது.
விண்ணியலில் இருக்கும் பிரபஞ்சப் புதிர்களில் மிகவும் குழப்பமான புதிரை சூரியனின் கொரோனா கொண்டுள்ளது. இந்தப்புதிர் எந்தளவுக்கு குழப்பமானது என்றுவிளங்கிக்கொள்ள பின்வருமாறு சிந்தியுங்கள்: ஒரு பனிக்கட்டியில் இருந்து தீச்சுவாலைகள் வந்தால் எப்படியிருக்கும்? இப்படியொரு நிகழ்வுதான் சூரியனிலும் நடக்கின்றது!
‘அணுக்கரு இணைவு’ (Nuclear fusion) என்கிற செயற்பாடு மூலம் சூரியனின் மையப்பகுதி 15 மில்லியன் பாகை வரை வெப்பமடைகிறது. இந்த வெப்பம் சூரியனின் மேற்பரப்பை அடையும்போது அதன் வெப்பநிலை 6000 பாகையாக குறைந்துவிடும். ஆனால் சூரியனின் மேட்பரப்பிற்கு மேலே உள்ள கொரோனாவின் வெப்பநிலை ஒரு மில்லியன் பாகைக்கும் அதிகமாக காணப்படுகிறது.
இந்தச் சற்றும் எதிர்பார்க்க முடியாதளவு வெப்பநிலை அதிகரிப்பு விஞ்ஞானிகளை 70 வருடங்களுக்கும் மேலாக வியப்பிலும் குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது. தற்போது விண்ணியலாளர்கள் இந்தப் புதிருக்கான விடைக்கு அருகில் வந்துவிட்டதாக கருதுகின்றனர்.
விண்ணியலாலர்களுக்குச் சூரியனுக்குக் காந்தப்புலம் இருப்பது தெரியும், அதாவது நமது பூமியைப் போலவே. சூரியனின் காந்தப்புலம் கொரோனாவின் புதிரில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனாலும் ஒரு விலைமதிப்பற்ற கேள்வி என்னவென்றால்: காந்தப்புலத்தினால் எப்படி வெப்பத்தை உருவாக்க முடியும்?
இந்தக் கேள்விக்கு ஒரு பதிலாக “அலைகளைக்” கூறலாம். அண்மைய காலத்தில் விண்ணியலாளர்கள் சூரியனின் காந்தப்புலத்தில் அலைகள் உருவாவதை அவதானித்துள்ளனர். இந்த அலைகள் கொரோனாவிற்கு மேலதிக சக்தியை வழங்கலாம். ஊஞ்சலில் ஆடும்போது எப்படி பின்னுக்கு இருந்து ஒருவர் சரியான நேரத்தில் தள்ளுவதால் ஊஞ்சல் வேகமாக முன்னோக்கி செல்லுமோ அதேபோலத்தான் இதுவும்!
ஆர்வக்குறிப்பு
எமது கண்களுக்கு கொரோனா தெரியாது, காரணம் அது சூரியனைவிட மில்லியன் மடங்கு பிரகாசம் குறைந்தது. ஆகவே சூரிய கிரகணத்தின் போது மட்டுமே பார்க்க முடியும். சூரியனைச் சுற்றி ஒரு வெள்ளிநிறத்தில் ஒளிவட்டமாகத் தெரியும்.
Share: