Find Us Online At
iBookstore
Android app on Google Play
Like Us
A programme by
வெடிக்கும் விண்மீனைச் சுற்றி இருக்கும் மூடுபுகையை அகற்றுதல்
15 September 2018

நாம் இரவு வானைப் பார்க்கும் போது அதில் இருக்கும் ஒவ்வொரு சிறு மின்னும் புள்ளிகளும் மிகப்பெரிய வெப்பமான ஒளிரும் வாயுத்திரள் என்பதை நம்புவது அவ்வளவு எளிதல்ல. இதில் இருக்கும் மிகச் சிறிய விண்மீன் கூட பூமியை விடப் பலமடங்கு பெரியது. சூரியனைச் சுற்றிவரும் பூமியின் பாதையே தனக்குள் ஒழித்துக்கொள்ளக்கூடிய அளவிற்கு பாரிய விண்மீன்களும் உண்டு.

இப்படியான பாரிய விண்மீன்கள் ‘சிவப்பு பேரரக்கன்’ (red supergiant) என அழைக்கப்படுகின்றன. இவை தங்களது வாழ்வுக்காலத்தில் இறுதியில் இருக்கும் விண்மீன்கள் ஆகும். வெகுவிரைவிலேயே இவை சுப்பர்நோவா எனும் பாரிய வெடிப்பில் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ளும்.

பிரபஞ்சத்தில் இடம்பெறும் வெடிப்புகளில் பெரியது இந்த சுப்பர்நோவா வெடிப்புகள். அண்ணளவாக 10 பில்லியன் சூரியன்களின் பிரகாசத்தோடு அவை வெடிப்பதுடன் சூரியன் தனது வாழ்வுக்காலத்தில் கொடுக்கும் மொத்த சக்தியையும் வெறும் சில நாட்களில் இந்த சுப்பர்நோவா வெளியிட்டுவிடும்.

குறிப்பாக சிவப்பு பேரரக்கன் வகை விண்மீன்கள் சுப்பர்நோவாவாக வெடிக்கும் போது ஒரு விசித்திரமான விடையம் நடைபெறும் – முழு வெடிப்பிற்கும் முன்னர் சிறிது நேரத்திற்கு மிகப்பிரகாசமான ஒளி அங்கே தென்படும். இதனை Shock breakout என விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.

Shock breakout அண்ணளவாக 20 நிமிடங்களுக்கு நீடிக்கும், எனவே இதனை அவதானிப்பது என்பது இலகுவான காரியமில்லை. ஆனால் 2016 இல் முதன்முறையாக கட்புலனாகும் ஒளியில் இதனை நாம் முதன் முதலில் அவதானித்தோம். அதன் பின்னர் இதனை அவதானிப்பதற்கு பல முயற்சிகள் எடுத்தும் எல்லாமே தோல்வியிலேயே முடிந்தது. விஞ்ஞானிகள் பொறுமையாக 26 சிவப்பு பேரரக்கன் வகை விண்மீன்கள் சுப்பர்நோவாவாக வெடிப்பதை அவதானித்தும் ஒன்றில் கூட இப்படியான shock breakout ஐ கண்டுபிடிக்க முடியவில்லை.

இப்படி மர்மமான முறையில் shock breakout மறைந்ததன் காரணத்தைக் கண்டறிய விஞ்ஞானிகள் தொழில்நுட்பத்தின் பக்கம் திரும்பினர். மிகச் சக்திவாய்ந்த சுப்பர்கணணிகளைக் கொண்டு சுப்பர்நோவா வெடிப்புகளை ஒப்புருவாக்கப்படுத்தி பார்க்கப்பட்டது. இதில் 500 வேறுபட்ட மாதிரிகள் பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொன்றிலும் சிறிய மாற்றங்கள் உண்டு, உதாரணமாக விண்மீனின் பிரகாசம்.

இந்த ஒப்புருவாக்கங்களில் இருந்து உண்மையான அவதானிப்போடு ஒத்துப்போகும் ஒரு மாதிரியில் இருந்த முக்கிய விடையம் – விண்மீனைச் சுற்றியிருந்த தூசுப்படலம். பல சுப்பர்நோவா வெடிப்புகளைச் சுற்றி இப்படியான தூசுப்படலங்கள் காணப்படுகின்றன. இவை shock breakout இல் இருந்து வரும் ஒளியை எமது தொலைநோக்கிகளில் இருந்து மறைக்கின்றன.

இப்படியான பெரும் வெடிப்புகள் பற்றி ஆய்வு செய்வது முக்கியமில்லாத விடையமாக தென்படலாம், ஆனால் எமது பிரபஞ்சத்தில் எப்படி பருப்பொருட்கள் சிதறிக்கிடக்கின்றன என்று இவை எமக்கு தெரிவிக்கின்றன. பூமியில், எமது உடலிலும் இருக்கும் சில்வர், நிக்கல் மற்றும் செப்பு போன்றவை வெடித்துச் சிதறிய விண்மீன்களின் எச்சத்தில் இருந்து வந்தவையே. உயிர் உருவாகியிருப்பதே இந்த சுப்பர்நோவாக்களால் தான்!

ஆர்வக்குறிப்பு

சிவப்பு பேரரக்கன் வகை விண்மீன் சுப்பர்நோவாவாக வெடிக்கும் போது அதனை நாம் இரண்டாம் வகை சுப்பர்நோவா (Type II Supernova) என வகைப்படுத்துகின்றோம். குறித்த விண்மீனின் சக்திமுதல் தீர்ந்துவிட, அதன் மையப்பகுதி ஈர்ப்புவிசையால் ஒடுங்கத் தொடங்கி அது மிகப்பெரிய சுப்பர்நோவா வெடிப்பாக மாறும்.

M Sri Saravana, UNAWE Sri Lanka

Share:

More news
12 October 2020
1 October 2020
16 September 2020
14 September 2020
10 September 2020

Images

Red Supergiant Supernova
Red Supergiant Supernova

Printer-friendly

PDF File
965.6 KB